அதிக வெப்பம்: பிரசாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளரால் பரபரப்பு

அதிகரித்த வெப்பம் மற்றும் ஈரப்பத வெப்பநிலை ஆகியவற்றால், பிரசாரத்திற்கு சென்ற பட்நாயக்கிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.;

Update:2024-04-22 17:08 IST

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வெப்ப அலை பரவல் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும். எனினும், வெப்ப அலையால், மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் ஆலோசனை கூட்டம் ஒன்றை இன்று நடத்தினர். இதில், நாடு முழுவதும் காணப்படும் வெப்ப அலை பரவலால் ஏற்படும் ஆபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் 39.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள கட்சியின் பூரி தொகுதிக்கான வேட்பாளராக போட்டியிடுபவர் அரூப் பட்நாயக். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், முன்னாள் மும்பை காவல் ஆணையாளராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

இந்த நிலையில், பூரி மாவட்டத்தில் உத்தர சாக் பகுதியில் இருந்து பிப்பிளி நகரம் நோக்கி தேர்தல் பிரசார ஊர்வலம் ஒன்று சென்றது. இதில் அவர் இன்று பங்கேற்றார். இதேபோன்று இந்த ஊர்வலத்தில் பிப்பிளி சட்டசபை தொகுதியின் வேட்பாளர் ருத்ரா மஹாரதியும் கலந்து கொண்டார்.

பிப்பிளி நகர் அருகே தேர்தல் பிரசாரத்திற்காக அவர் சென்றபோது, கடுமையான வெப்பம் தாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட அவர், மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின்னர் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறியுள்ளார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து உள்ளது.

இதில், அதிகரித்த வெப்பம் மற்றும் ஈரப்பத வெப்பநிலை ஆகியவற்றால், பட்நாயக்கிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பிரசாரத்தின்போது, வேட்பாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்