பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன - உ.பி. துணை முதல்-மந்திரி
எங்களால் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறுவோம் என்று உ.பி. துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான், ராஜு சந்திரசேகர், கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட 27 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாகவும், அது நாட்டு மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் என்றும் உத்தரப் பிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் அதன் விவரங்களை என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது. தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, எங்களால் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறுவோம். பா.ஜ.க. சொன்னதைச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. எங்களால் செய்ய முடியாததை நாங்கள் கூறுவதில்லை.
என்ன முன்மொழியப்பட வேண்டும் என்பது குறித்து 3 லட்சத்துக்கும் அதிகமான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர். 'நமோ' ஆப் மூலமாகவும், இதற்காக வெளியிடப்பட்ட மிஸ்டு கால் எண் மூலமாகவும் பரிந்துரைகள் வந்துள்ளன. நாட்டின் நம்பிக்கைக்கு பா.ஜ.க. எப்போதும் உண்மையாகவே இருந்து வருகிறது, அப்படியே இருக்கும் என்று மட்டுமே என்னால் கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.