பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்று கொண்டார் உமர் அப்துல்லா; சுயேச்சை வேட்பாளருக்கு வாழ்த்து
உமர் அப்துல்லா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வாக்காளர்கள் தங்களுடைய முடிவை தெரிவித்து உள்ளனர். ஜனநாயகத்தில் அதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார்.;
ஸ்ரீநகர்,
நாடாளுமன்ற தேர்தலில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மக்களவை தொகுதியில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான உமர் அப்துல்லா போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில், அவர் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தின் வழியே அப்துல் ரஷீத்துக்கு, அப்துல்லா தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அந்த செய்தியில், உமர் அப்துல்லா தோல்வியை ஒப்பு கொண்டதுடன், ரஷீத் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார். வாக்காளர்கள் தங்களுடைய முடிவை தெரிவித்து உள்ளனர். ஜனநாயகத்தில் அதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 705 வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் ரஷீத் ஷேக் முன்னிலை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மக்களவை தேர்தல் இதுவாகும்.