"இது சாதாரண தேர்தல் அல்ல" - பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுநாள் (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த கடிதத்தில், இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "எனது சக காரியகர்த்தாவுக்கு. ராம நவமியின் நன்னாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜனதாவின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும்.
"மக்களின் ஆசியுடன், நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து. ஒரு அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.