நாடாளுமன்ற தேர்தல்: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது.;
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க. - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. இங்கு இந்த மூன்று கட்சிகளை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய கட்சிகள் இல்லை. எப்போதும் இந்த 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. பா.ஜ.க. - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
பா.ஜ.க. 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம் (எஸ்) தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டது. ஆனால், அக்கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
காங்கிரஸ் 24 தொகுதிகளூக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு-குடகு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது
வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள் ஆகும். 5-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.