10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை - திருமாவளவன் குற்றச்சாட்டு

தனியார் முதலாளிகளுக்காக பிரதமர் மோடி பாடுபடுகிறார் என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2024-03-28 10:30 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது திருமாவளவன் பேசியதாவது:-

10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடுகிறார். தனியார் முதலாளிகளுக்காக பிரதமர் மோடி பாடுபடுகிறார். சாதி, மத வெறி உணர்வுகளை தூண்டுவதுதான் பா.ஜ.க.,வின் செயல்பாடுகளாக உள்ளது. அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வேலையை தான் பா.ஜ.க அரசு செயல்படுத்துகிறது. சமூக நீதியின் குரலாக , பெரியாரின் குரலாக, அம்பேத்கரின் குரலாக மக்களவையில் ஒலிக்க 'பானை' சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய அமைச்சர் பொன்முடி,

சமுதாய சீர்திருத்த கொள்கைகளை உடைய வி.சி.க வேட்பாளர்கள் ரவிக்குமாரும், திருமாவளவனும் தமிழ்நாட்டுக்காக மக்களவையில் குரல் கொடுப்பவர்கள்.இவர்களை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். நடைபெறவுள்ள தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.'பானை' சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் வி.சி.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்