தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினார் என தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளன.
தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் ஓர் அணியும், பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சியும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
இதில், தமிழகத்தின் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, தேர்தல் பிரசார பணிகளுக்கு அவர் தயாரானார். இதனை முன்னிட்டு, வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது தேர்தல் பறக்கும் படை புகார் அளித்து உள்ளது. அதில், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன், முறையான அனுமதி இன்றி கூட்டம் கூட்டினார் என ஜெயவர்தன் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின்பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.