நெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை

வருமானவரி சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-04-04 18:48 GMT

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலையில் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு காரில் வந்தனர். அவர்கள் திடீரென அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது முன்னாள் சபாநாயகரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. மாவட்ட அலுவலகம் முழுவதும் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலரிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்த சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு 8.15 மணியளவில் சோதனையை முடித்து வெளியே வந்தனர். அவர்களிடம் சோதனையில் பணம் அல்லது ஆவணங்கள் ஏதேனும் சிக்கி உள்ளதா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சோதனை குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் கூறுகையில், ''அதிகாரிகள் வந்து அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். ஆனால், இங்கிருந்து அவர்கள் எதுவும் எடுத்துச்செல்லவில்லை'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்