ஒடிசா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.

Update: 2024-06-05 07:48 GMT

புவனேஸ்வர்,

நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கி, கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியை பிடித்து முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார்.

தற்போது 77 வயதாகும் நவீன் பட்நாயக், 2024-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 6-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.

அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ஒடிசாவின் அடுத்த முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில கவர்னர் ரகுபர் தாசை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.



Tags:    

மேலும் செய்திகள்