காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரிகளின் எம்.பி. கனவு நிறைவேறுமா..? இன்று வாக்கு எண்ணிக்கை

காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன.;

Update:2024-06-04 03:37 IST

ஸ்ரீநகர்,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த தேர்தலில் காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 3 தொகுதிகள் காஷ்மீரிலும், 2 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும் அடங்கி உள்ளன.

காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக்-ரஜோரி ஆகிய இந்த 3 தொகுதிகளிலும் 1989-ம் ஆண்டுக்குப்பிறகு முதல் முறையாக அதிக வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது 3 தொகுதிகளிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தது.

இந்த தொகுதிகளில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 66 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகளான உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் சஜத் லோன் (மக்களின் மாநாடு), சிறையில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரஷித் ஷேக் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

இந்த 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக ஒவ்வொரு மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் வெளிநபர் யாரும் நுழையாதவாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கட்சித்தொண்டர்கள் வன்முறையில் இறங்காமல் இருப்பதற்கும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு இருக்கிறது.

இது தொடர்பாக மேற்படி தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தினர். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளைப்போல காஷ்மீரிலும் இன்று காலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது. இந்த முடிவுகளை ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.

ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தை ஏற்கனவே ஆட்சி செய்துள்ள முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரின் எம்.பி. கனவு பலிக்குமா? என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.

Tags:    

மேலும் செய்திகள்