மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் - ராகுல்காந்தி

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-27 18:46 IST

பாட்னா,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பக்தியர்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தான் மனிதனே கிடையாது கடவுளின் தூதர், கடவுளின் உத்வேகத்துடன்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதானிக்கும் தனக்கும் இடையேயான ஒப்பந்தம் குறித்து அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே மோடி இவ்வாறு கூறி வருகிறார்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் வறுமையில் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு தலா 1 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்