'மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்' - ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும், மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாள்ர்களிடம் அவர் கூறியதாவது;-
"சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. அவர் 3-வது முறையாக மட்டுமின்றி, 4-வது முறையும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்.
மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் பா.ஜ.க. நல்ல வாக்கு சதவீதத்தைப் பெறும். தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜ.க. உழைத்து வருகிறது."
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.