'மோடி அலை எப்போதும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும்' - பா.ஜ.க. வேட்பாளர் நவ்நீத் ராணா
நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி தேவை என்று நவ்நீத் ராணா தெரிவித்துள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நவ்நீத் ராணா, கடந்த திங்கட்கிழமை அமராவதி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, "மக்களவை தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல் போல் நாம் எதிர்கொள்ள வேண்டும். மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி தீவிரமாக இயங்கியபோதும் நான் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், நவ்நீத் ராணா உண்மையை பேசுகிறார் என்றும், அவரது கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து நவ்நீத் ராணா கூறுகையில், "எதிர்கட்சிகள் எனது பேச்சை திரித்து கூறி வருகின்றன. நாட்டில் எப்போதும் மோடி அலை இருந்தது. தற்போதும் மோடி அலை உள்ளது, இனிமேலும் இருக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி தேவை" என்று தெரிவித்துள்ளார்.