மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதாலேயே நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடவில்லை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதாலேயே நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
தருமபுரி,
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;-
மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென்று யாரை பார்த்து சொல்கிறார்? தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. பெற்ற பணத்தை உங்களுக்கு தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? தேர்தலில் நின்றால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதாலே நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை.
பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் தோற்கடிக்கப்படவேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி வசனம் பேசுகிறார். பதவி சுகத்தை அனுபவிக்க தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வைத்தார், 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தார், குடியுரிமை திருத்தச்சட்டத்தை ஆதரித்தார்.
அட்டர்னி ஜெனரல் போன்று எடப்பாடி பழனிசாமி சட்ட விதிகள் (லா பாய்ண்ட்ஸ்) எல்லாம் பேசுகிறார். பா.ஜ.க. கொண்டுவந்த அனைத்தையும் ஆதரித்தார்.
தமிழ்நாட்டை பாழ்படுத்திய அ.தி.மு.க., தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க., அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள பா.ம.க. என இந்த மக்கள் விரோத கூட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.