அரசியல் வாரிசாக நியமித்த மருமகனை அதிரடியாக நீக்கிய மாயாவதி

ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

Update: 2024-05-08 11:35 GMT

லக்னோ,

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது தம்பி மகனான ஆகாஷ் ஆனந்த் என்பவரை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆகாஷ் ஆனந்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆகாஷ் ஆனந்த் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும், பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்று கொள்வதாக மாயாவதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆகாஷ் ஆனந்துக்கு அனுபவம் போதாது என்பதால் அவர் தற்காலிகமாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சி அம்பேத்கரின் சுயமரியாதைக்கான கட்சி. சமூக மாற்றத்திற்காக கன்ஷிராமும், நானும் எங்களது மொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறோம். இளம் தலைமுறை அதற்கு வலு சேர்க்க இருக்கிறார்கள். இதையொட்டியே சமீபத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் எனது அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை நியமித்திருந்தேன். ஆனால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தற்போது இந்த 2 பொறுப்புகளில் இருந்தும் அவரை விடுவித்து இருக்கிறேன். அவருக்கு அரசியல் முதிர்ச்சி கிடைக்கும் வரை இந்த அறிவிப்பு தொடரும். அவரது தந்தை ஆனந்த் குமார் தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வார். கட்சி எந்த விதமான தியாகத்திற்கும் தயங்காது என்பதை இது காட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் சீதாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஆகாஷ் ஆனந்தின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்