ஆம் ஆத்மி கட்சிக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி நாளை கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.

Update: 2024-04-26 10:50 GMT

புதுடெல்லி,

டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் மே 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மந்திரியுமான அதிஷி தெரிவித்துள்ளார்.

அதன்படி சுனிதா கெஜ்ரிவால் நாளை கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். நாளை மறுதினம் மேற்கு டெல்லியில் ரோடு ஷோ நடத்துகிறார் என அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து சுனிதா கெஜ்ரிவால், அவருக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் தகவல்களை பரிமாற்றி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக டெல்லி மக்கள் மற்றும் டெல்லி மந்திரிகளுக்கு மூன்று முறை மீடியா மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்