நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- திருவள்ளூர்(தனி)

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

Update: 2024-03-29 09:16 GMT

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி சென்னைக்கு மிக அருகில் உள்ள தொகுதியாகும். விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த தொகுதி ஆக விளங்குகிறது. கடந்த 2009-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்து வந்த நிலையில், தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், திருவள்ளூர் (தனி) தொகுதியாக மாறியுள்ளது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பி.வேணுகோபால் 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் 3 லட்சத்து 50 ஆயிரத்து 69 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம் வேணுகோபால் 3 லட்சத்து 23 ஆயிரத்து 430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி என்ற பெருமையையும் இவர் பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.ஜெயக்குமார் 7 லட்சத்து 67 ஆயிரத்து 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேணுகோபால் 4 லட்சத்து 10 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்றார்.

அரசு கலைக்கல்லூரி

திருவள்ளூர் தொகுதியில் தற்போது வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம், செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில்வே மேம்பாலம் போன்ற பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. அதேபோல் திருநின்றவூர் நகராட்சி, ஆவடி மாநகராட்சி ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடையவில்லை. அதேபோல் திருவள்ளூர் பகுதியில் சாலைகள் குறுகி இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

நிறுத்தப்பட்ட ரெயில்கள்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிகமாக விவசாயம் சார்ந்துள்ள மாவட்டமாகும். 3 முக்கிய ஆறுகள் உள்ளன. அவை கூவம் ஆறு, ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு. திருவள்ளூர் தொகுதியில் தான் கூவம் ஆறு உருவாகும் இடமாக உள்ளது. மேலும் காக்களூர், கும்மிடிப்பூண்டி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இங்கு இந்துக்கள் அதிக அளவில் உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் பரவலாக உள்ளனர். ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள போதிலும் இங்கு வன்னியர்கள், முதலியார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட புறநகர் மின்சார ரெயில் அட்டவணையில் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதில் கும்மிடிப்பூண்டிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாத ரெயில்வே அட்டவணைப்படி நள்ளிரவு 1.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயிலும் நிறுத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு இரவுநேர பணிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர மாநகர பஸ் சேவை செங்குன்றம், பூந்தமல்லி, ஆவடி வரை மட்டுமே உள்ளது. அதற்கு மேற்பட்ட பகுதிகளுக்கு மேற்கண்ட நள்ளிரவு ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால், அந்நேரத்தில் பணி முடிந்து செல்வோர் ரெயில் நிலையத்திலோ அல்லது பணியிடத்திலோ தங்கிவிட்டு அதிகாலையில் வீட்டுக்கு திரும்பும் நிலை நீடிக்கிறது. பல்வேறு முறை இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தும் இந்த வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. சென்னையை அடுத்துள்ள தொகுதியாக இருந்த போதிலும் போதிய வளர்ச்சி பெற்றதாக தெரியவில்லை.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.

முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

கே.ஜெயக்குமார் (காங்) 7,67,292

பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) 4,10,337

லோகரங்கன் (ம.நீ.ம) 73,731

வெற்றிச்செல்வி (நாம் தமிழர்) 65,416

பொன். ராஜா (அ.ம.மு.க.) 33,944

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 20 லட்சத்து 58 ஆயிரத்து 98 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 10,10,968

பெண் வாக்காளர்கள் 10,46,755

மூன்றாம் பாலினத்தவர் 375

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

மாதவரம் 4,60,935

ஆவடி 4,38,813

பூந்தமல்லி (தனி) 3,67,947

கும்மிடிப்பூண்டி 2,72,622

திருவள்ளூர் 2,61,094

பொன்னேரி (தனி) 2,56,687

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:

கும்மிடிப்பூண்டி (தி.மு.க. வெற்றி)

டி.ஜெ.கோவிந்தராஜன் (தி.மு.க.) 1,26,452

எம்.பிரகாஷ் (பா.ம.க.) 75,514

உஷா (நாம் தமிழர்) 11,701

கே.எம். தில்லி (தே.மு.தி.க.) 2,576

எஸ்.நாகராஜ் (பா.ஜனதா) 1,038

பொன்னேரி (தனி)

(காங்கிரஸ் வெற்றி)

துரைசந்திரசேகர் (காங்கிரஸ்) 94,528

பி.பலராமன் (அ.தி.மு.க.) 84,839

மகேஸ்வரி (நாம் தமிழர்) 19,027

டி.தேசிங்கு ராஜன் (ம.நீ.ம.) 5,394

பொன். ராஜா (அ.ம.மு.க.) 2,832

திருவள்ளூர் (தி.மு.க. வெற்றி)

வி.ஜி.ராஜேந்திரன் (தி.மு.க.) 1,07,709

பி.வி.ரமணா (அ.தி.மு.க.) 85,008

பி.பசுபதி (நாம் தமிழர்) 15,028

டி.தாஸ் (பகுஜன் சமாஜ்) 2,329

என்.குரு (அ.ம.மு.க.) 1,077

பூந்தமல்லி (தனி) (தி.மு.க. வெற்றி)

ஆ.கிருஷ்ணசாமி (தி.மு.க.) 1,49,578

எஸ்.எக்ஸ்.ராஜமன்னார் (பா.ம.க.) 55,468

மணிமேகலை (நாம் தமிழர்) 29,871

ஜெ.ரேவதி மணிமேகலை (ம.நீ.ம.) 11,927

டி.ஏ.ஏழுமலை (அ.ம.மு.க.) 8,805

ஆவடி (தி.மு.க. வெற்றி)

சா.மு.நாசர் (தி.மு.க.) 1,50,287

க.பாண்டியராஜன் (அ.தி.மு.க.) 95,012

ஜி.விஜயலட்சுமி (நாம் தமிழர்) 30,087

பி.உதயகுமார் (ம.நீ.ம.) 17,092

என்.எம்.சங்கர் (தே.மு.தி.க) 1,911

மாதவரம் (தி.மு.க. வெற்றி)

எஸ்.சுதர்சனம் (தி.மு.க.) 1,51,485

வி.மூர்த்தி (அ.தி.மு.க.) 94,414

ஆர்.ஏழுமலை (நாம் தமிழர்) 27,453

ரமேஷ் (ம.நீ.ம.) 15,877

டி.தட்சிணாமூர்த்தி (அ.ம.மு.க.) 7,104

 இந்த முறை போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்)

பொன் வி.பால கணபதி (பாஜக)

நல்லதம்பி (தே.மு.தி.க.)

மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி)

வெற்றி யார் கையில்?

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களும் புது முகங்களாக தொகுதி மக்களால் கருதப்படுகின்றனர். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை தி.மு.க சார்பில் அந்த கட்சி வேட்பாளர் நிறுத்த வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திருவள்ளூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் என்பதும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜனதா சார்பில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள பொன் வி.பால கணபதி திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் - பா.ஜனதா நேரடியாக களம் காண்கிறது.

அதேபோல் அ.தி.மு.க சார்பில் அந்த கட்சி வேட்பாளரே இந்த முறை களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளருமான கு.நல்லதம்பி களம் இறக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் என்ஜினீயர் ஜெகதீஷ் சந்தர் களம் காண்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க.வும் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொகுதியில் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். வெற்றி யார் கையில் என்பது வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்