நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-கன்னியாகுமரி

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை அதாவது 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு வரை குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் இருந்தன.

Update: 2024-04-08 09:49 GMT

தமிழகத்தின் தென் எல்லை குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியும் கன்னியாகுமரி பெயரிலேயே அமைந்துள்ளது. இயற்கையின் எழிலோடு பிரமிக்கச் செய்யும் சுற்றுலாத்தலங்களும், பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் மாவட்டத்தின் பெருமைக்கு சான்று பகிர்கின்றன. புகழ்பெற்ற தலைவர்களையும், கவிஞர்களையும், நடிகர்களையும் தந்த மாவட்டம் என்ற பெருமையும் இந்த குமரிக்கு உண்டு.

காமராஜர் வென்ற தொகுதி

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 1967-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான விருதுநகரில் தோல்வியை சந்தித்தார். அப்போது நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி என்ற பெயரில் இருந்த போது எம்.பி.யாக இருந்த மார்ஷல் நேசமணி மறைந்தார். அவரது மறைவுக்குப்பிறகு 1969-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு 1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் காமராஜர் இந்த தொகுதியில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றிவாகை சூடினார். இந்த தொகுதியில் மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளுக்கு தான் செல்வாக்கு அதிகம். குறிப்பாக காங்கிரஸ், பா.ஜனதா கணிசமான அளவு வாக்கு வங்கியை கொண்டுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு தேசிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில் வாக்குகள் உள்ளன. சில தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

இடைத்தேர்தலை சந்தித்தது

இந்த நாடாளுமன்ற தொகுதி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது இடைத்தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோனா காலத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் பொதுத்தேர்தல் நடந்த 2 ஆண்டுகளிலேயே இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதி பொதுத்தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை அதாவது 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு வரை குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் இருந்தன. இதில் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மற்ற 6 சட்டசபை தொகுதிகளை கொண்டதாக நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது திருவட்டார் தொகுதி நீக்கப்பட்டது. இதன்பிறகு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இந்த தொகுதி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

11 முறை காங்கிரஸ் வெற்றி

இந்த தொகுதி 1957-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 18 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், த.மா.கா., பா.ஜனதா கட்சிகள் தலா 2 முறையும், ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சமுதாயம் வாரியாக வாக்குகள்

இந்த தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயம், மீன்பிடித்தல், ரப்பர் பால் வடித்தல், தேன் உற்பத்தி, முந்திரி தொழிற்சாலை போன்ற தொழில்கள் இருந்து வருகின்றன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிறிஸ்தவ நாடார் 30.08 சதவீதம், இந்து நாடார் 29.38 சதவீதம், கிறிஸ்தவ மீனவர் 10.20 சதவீதம், தலித் கிறிஸ்தவர் 4.48 சதவீதம், இஸ்லாமியர்கள் 4.43 சதவீதம், இந்து வெள்ளாளர் 4.21 சதவீதம், இந்து நாயர்கள் 4.03 சதவீதம், இந்து ஆதிதிராவிடர் 2.29 சதவீதம், கிருஷ்ண வகை 2.22 சதவீதம், ஆசாரி 1.63 சதவீதம், ஈழவர் மற்றும் பணிக்கர் 1.61 சதவீதம், செட்டியார் 0.75 சதவீதம், நாவிதர் 0.60 சதவீதம், வண்ணார் 0.60 சதவீதம், செக்காலர் 0.42 சதவீதம், கோனார் 0.42 சதவீதம், அருந்ததியர் 0.40 சதவீதம், பிராமணர், முதலியார், பழங்குடியின காணி மக்கள் உள்ளிட்ட பிற சமுதாய மக்கள், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இதர பிரிவினர் 2.25 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள். இருப்பினும் இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்

தரம் மிகுந்த ரப்பர் உற்பத்தி செய்யப்படும் குமரி மாவட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் ரப்பர் தொழிற்சாலை அல்லது ரப்பர் பூங்கா அமைக்கப்பட வேண்டும், ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மலர் சாகுபடி அதிகம் நடைபெறுவதாலும், மலர் சந்தை அமைந்துள்ளதாலும் குமரி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் தென்னை வாரிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும், தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும், ஒரு காலத்தில் குமரி மாவட்டத்தின் சிறந்த நீர்வழித்தடமாகவும், வர்த்தக போக்குவரத்து வழித்தடமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். கால்வாயை சீரமைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகள் நீண்டகால கோரிக்கைகளாக, நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

மதில் மேல் பூனை

இந்த கோரிக்கைகள் தேர்தலின் போதெல்லாம் வேட்பாளர்களின் வாக்குறுதிகளாகவும் இருந்து வருகின்றன. மேலும் பல வாக்குறுதிகளையும் வேட்பாளர்கள் தங்களது அனல் பறக்கும் பிரசாரத்தின்போது அள்ளிவீசி வருகிறார்கள்.இதை மதில்மேல் பூனை என்பதைப் போன்று ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்கள் உற்று கவனித்து வருகிறார்கள். அவர்கள் எந்த பக்கம் சாய்கிறார்களோ? எந்த வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை அளிக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் வெற்றிக்கனி கிடைக்கும்.

வெற்றி யார் கையில்?

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 22 பேர் களத்தில் நின்றாலும் காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதிலும் காங்கிரஸ், பா.ஜனதா இடையே தான் நேரடி போட்டி உள்ளது.

இங்கு காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் இந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இதனால் அவர் தொகுதி முழுவதும் சுற்றி, சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார். தான் எம்.பி.யாக இருந்த 3 ஆண்டுகளில் முடங்கிப்போன நான்குவழிச்சாலைப் பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தது, இரட்டை ரெயில் பாதை பணியை வேகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி கொடுத்திருப்பது ஆகியவற்றால் தான் வெற்றி பெறுவது உறுதி என்கிறார் விஜய் வசந்த்.

இதேபோல் முன்னாள் மத்திய மந்திரியான பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் மத்திய மந்திரியாக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை குமரிக்கு கொண்டு வந்துள்ளேன். பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறாததால் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்கிறார், பொன்.ராதாகிருஷ்ணன். அதனால் வேட்பாளராக அறிவித்த நாளில் இருந்து அவர் முக்கிய பிரமுகர்கள், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் தான் சார்ந்துள்ள கட்சியை இந்த தொகுதியில் வெற்றி பெறச் செய்து முதன் முறையாக அ.தி.மு.க. வென்ற தொகுதி என்ற பெருமையை தருவேன் என்ற குறிக்கோளோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாறி, மாறி வாக்களித்த மக்கள் தற்போது ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் தன்னை வெற்றி பெறச்செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் களம் காண்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் ஒரு என்ஜினீயர். தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தேர்தல் வாக்குறுதிகள், மக்களுக்கான அவருடைய உழைப்பு, குமரி மாவட்ட மக்களுக்கு தான் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்கிறார் மரிய ஜெனிபர்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனியாக வாக்கு வங்கி இருந்தாலும் நடுநிலையாளர்கள், இளம் வாக்காளர்கள் ஆகியோர் தான் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் எந்த பக்கம் சாய்கிறார்களோ அந்த கட்சியின் வேட்பாளருக்குத் தான் வெற்றி வாய்ப்பு என்கிறார்கள் தேர்தல் ஆர்வலர்கள்.

2021-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இதில் முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

விஜய்வசந்த் (காங்கிரஸ்) - 5,76,037 (வெற்றி)

பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா) - 4,38,087

அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர் கட்சி) - 59,593

சுபா சார்லஸ் (மக்கள் நீதி மய்யம்) - 8,536

Tags:    

மேலும் செய்திகள்