ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுக்குமா ராமநாதபுரம்?

ராமநாதபுரம் தொகுதியில் குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகளை கைப்பற்றுபவரே வெற்றிக்கனியை பறிக்க முடியும்.;

Update:2024-03-22 13:03 IST

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு தமிழகத்தை தொற்றிக்கொண்டு விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும்போது பல ஆச்சரியங்களை பார்க்க முடிந்தது.

குறிப்பாக தமிழக பா.ஜனதா பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெற்றது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே ஆர்வமாக இருந்தார்.

பா.ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி இருந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதி மட்டும் ஒதுக்கப்படுவதாகவும், அதில் ஓ.பன்னீர் செல்வமே களத்தில் குதித்து இருப்பதும் பலருக்கு அதிக வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் தொகுதியில் அறந்தாங்கி, திருச்சூழி, பரமகுடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளும் தி.மு.க. கூட்டணி வசம் உள்ளன.

கடந்த 2019 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி ( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) வெற்றி பெற்றார். அவர் 4 லட்சத்து 5 ஆயிரத்து 945 வாக்குகளை பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட அவருக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 வாக்குகள் கிடைத்தன. 3-ம் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஆனந்த் பெற்றார். அவருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 பேர் வாக்களித்து இருந்தனர். 4-வது இடத்தை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் ( 46, 385 வாக்குகள்) அதற்கு அடுத்த இடத்தை மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும்(14,925 வாக்குகள்) பெற்றனர்.

2014-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜா 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த இடத்தை தி.மு.க.வின் முகம்மது ஜலீல் பெற்றார். அவருக்கு 2 லட்சத்து 86 வாக்குகள் கிடைத்தன. 3-வது இடத்தை பா.ஜனதாவின் குப்புராமுவும் (1,71, 082 ஓட்டுகள்) 4-வது இடத்தை காங்கிரசின் திருநாவுக்கரசும்(62160 ஓட்டுகள்) பிடித்தனர்.

இந்த தொகுதியில் 14 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 4 முனைப்போட்டி மற்றும் புதிய வாக்காளர் காரணமாக குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகளை கைப்பற்றுபவரே வெற்றிக் கனியை பறிக்க முடியும்.

ராமநாதபுரம் தொகுதியை பொருத்தவரை ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த செல்வாக்கு மட்டுமின்றி பா.ஜனதா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நம்பி களம் புகுந்து உள்ளார். அவருக்கு அந்த தொகுதி கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்