புதிய எம்.பி.க்களை வரவேற்க ஏற்பாடுகள் மும்முரம் - மக்களவை செயலகம் தகவல்
புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகம் மும்முரமாக தயாராகி வருகிறது.;
புதுடெல்லி,
18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகம் மும்முரமாக தயாராகி வருகிறது. இது தொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
18-வது மக்களவை உறுப்பினர்களை வரவேற்க தயாராக உள்ளோம். அவர்களின் தடையற்ற பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவையின் ஹவுஸ் கமிட்டியால் வழக்கமான தங்குமிடம் வழங்கப்படும் வரை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேற்கு கோர்ட்டு விடுதி அல்லது அரசு விருந்தினர் இல்லங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அவர்களின் பயண திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதிகள் செய்துதரப்படும்.
புதிய உறுப்பினர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை கவனமாக கண்காணிக்கவும், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தொடர்பு விவரங்களை நிகழ்நேர அடிப்படையில் பதிவு செய்யவும் ஒரு குழுவுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.