மக்களவை தேர்தல்: மேற்கு வங்காளத்தில் ஆயுதப்படை பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மேற்கு வங்காளத்தில் 55 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் 45 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
இந்த நிலையில், வரும் 15-ந்தேதிக்கு முன்பாக மேற்கு வங்காளத்தில் மேலும் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.