நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

வருகிற 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.;

Update:2024-06-01 05:00 IST

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு இன்று (சனிக்கிழமை) இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் ெபாருத்தப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

இதில் மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 960 கம்பெனி துணை ராணுவத்தினருடன், உள்ளூர் போலீசார் 33 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இன்று தேர்தல் நடைபெறும் 57 தொகுதிகளில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இங்கு அவர் 3-வது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

மேலும் இமாசலபிரதேசம் மண்டியில் நடிகை கங்கனா ரணாவத், ஹமீர்பூரில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பஞ்சாப்பின் பதிண்டா தொகுதியில் சிரோன்மணி அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், உத்தரபிரதேசம் கோரக்பூரில் போஜ்பூரி நடிகர் ரவிகிஷன், பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி, மேற்குவங்காள மாநிலம் டைமண்ட் ஹார்பரில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்பட 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில், கடந்த முறை (2019-ம் ஆண்டு) பா.ஜனதா 25 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 7 கட்ட தேர்தலுக்கான 75 நாட்கள் பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரங்களில் கோடை வெயிலைவிட அதிகமாக அனல் பறந்தது என்றே கூறலாம். நேற்று முன்தினம் அந்த பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி பஞ்சாப்பில் தனது பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். தற்போது அவர் கன்னியாகுமரியில் 48 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதையடுத்து வருகிற 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்