காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு - செல்வப்பெருந்தகை பேட்டி
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்.
ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.