கேரளா: தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்

கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சி.ஆர். மகேஷ் காயம் அடைந்துள்ளார்.;

Update:2024-04-24 19:49 IST

மலப்புரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

இதன்படி, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கேரளாவில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று சூடு பிடித்திருந்தது.

இதில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தன. இந்நிலையில், இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தது. தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கொல்லம் அடுத்த கருநாகப்பள்ளி பகுதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. கொல்லம் மற்றும் நெய்யாற்றங்கரையில் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோன்று, மலப்புரம், மாவேலிக்கரை, பெரும்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மோதல் ஏற்பட்டது.

இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சி.ஆர். மகேஷ் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி தொண்டர்கள் காயமடைந்த எம்.எல்.ஏ.வை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்