கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது: சுனிதா கெஜ்ரிவால் பேச்சு
கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறினார்.;
டெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது. கோடிக்கணக்கான மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். நாங்கள் இன்று வாக்கு கேட்கவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறோம். என்று கூறினார்.
அதனை தொடர்ந்து சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக எழுதிய கடிதத்தை சுனிதா கெஜ்ரிவால் படித்துக் காண்பித்தார்.
அந்த கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
* நாடு முழுமைக்கும் 24 மணி நேர மின்சார வசதி;
* ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம்;
* அனைத்து கிராமங்களிலும் சிறந்த அரசு பள்ளிகள் அமைக்கப்படும்.
* டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது போல் அனைத்து கிராமங்களிலும் மொஹல்லா மருத்துவமனை அமைக்கப்பட்டு, இலவச சிகிச்சை அளிக்கப்படும்;
* எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது போல விவசாயிகளுக்கு சரியான விலை வழங்குதல்.
* டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.