கர்நாடக நிலவரம்: பா.ஜ.க.-16, காங்கிரஸ்-10, ஜே.டி.(எஸ்.)-2 முன்னிலை; பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு

பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பிரஜ்வல் ரேவண்ணா 36 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம். பட்டேல் 43,719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.;

Update: 2024-06-04 10:51 GMT

பெங்களூரு,

இந்திய அரசியலில் வெற்றியை முடிவு செய்வதில், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவும் பெரும் பங்கு வகிக்கின்றது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அக்கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. 3 இடங்களில் மதசார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டு, அதில் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த தேர்தலில், கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரேயாஸ் எம். பட்டேல் 43,719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியை கைப்பற்றின. மீதமுள்ள ஒரு தொகுதியில், பா.ஜ.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்