கச்சத்தீவு விவகாரம்: பா.ஜ.க. கையில் எடுத்தவுடன் உண்மை தெரியவந்துள்ளது - அண்ணாமலை பேட்டி

ஜூன் 4ம் தேதி மக்களின் தீர்ப்பை தி.மு.க.,வினர் பார்ப்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-04-03 09:29 GMT

கோவை,

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தமிழகத்தை எட்டி பார்க்கிறார். கடந்த 3 வருடங்களில் ஸ்பெயின், சிங்கப்பூர், துபாய், ஜப்பான் சென்றார். இதனால் எந்த பயனும் இல்லை. முதல்-அமைச்சர் களத்திற்கு வராததால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கொள்ளையடிப்பதையே முழுநேர பணியாக வைத்துள்ளனர். வீதிக்கு வந்தால்தான் மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது முதல்-அமைச்சருக்கு தெரியும்.

‛ரோடு ஷோ'வை முதல்-அமைச்சர் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்-அமைச்சர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்-அமைச்சருக்கு பயம் ஏன்?

பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா தேனியில் நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்-அமைச்சர் செய்யவில்லை. மாய உலகத்திற்குள் அவர் கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை அவர் விமர்சிக்கிறார். பிரதமர் உழைப்பை பாருங்கள். முதல்-அமைச்சரின் உழைப்பை பாருங்கள் மக்களே முடிவு செய்யட்டும் யார் மக்களுக்காக உழைப்பது யார் என தெரியும்.

இன்று ராஜா சனாதன தர்மம், நான் ராம பக்தன், அயோத்தி சென்றேன் என்கிறார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதி. இந்த முறை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

சனாதன தர்மத்தை எதிர்த்தால் தினமும் எதிருங்கள். தேர்தலுக்கு முன் எதிர்க்கிறீர்கள். தேர்தலின் போது நெற்றியில் பட்டை போடுகிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கிறீர்கள். பிரதமரின் தமிழக வருகை உறுதியாகவில்லை. உறுதியான உடன் சொல்கிறோம்.

கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்த பிறகு மக்களிடம் உண்மை தெரிந்துவிட்டது. கச்சத்தீவு பற்றி முதல்-அமைச்சர் ஒவ்வொரு மேடையிலும் பேசினார். நாங்கள் மக்களிடம் உண்மையை சொன்ன பிறகு தி.மு.க.,வினர் ஏன் பதறுகின்றனர்?. எங்களுடைய கடமையை செய்துள்ளோம். மக்கள் வரவேற்கின்றனர். மீனவ நண்பர்களுக்கு 50 ஆண்டுக்கு பிறகு உண்மை தெரிந்துள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததை சிதம்பரத்திற்கு தெரியும். பொது வெளியில் இருப்பதால் தான் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு தொடர்பான தகவலை பெற முடிந்தது. 29 பைசா மோடி என உதயநிதி பேசினால், அவரை பீர் உதயநிதி, சாராய உதயநிதி, ட்ரக் உதயநிதி டாஸ்மாக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை வைத்து நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்களும் நாடகம் நடத்துவதாக நாங்களும் சொல்கிறோம். பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது. கச்சத்தீவு இந்தியாவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 1974ல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு, இன்று கேள்வி கேட்டால் அதை விமர்சிப்பதை ஏற்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.

ஆட்டை பிரியாணி போடுவோம் என டி.ஆர்.பி.ராஜா பேசி உள்ளார். அந்த ஆட்டை கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடட்டும். ஜூன் 4ல் கோவையில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படும். மக்களின் மனதை டி.ஆர்.பி.ராஜாவால் மாற்ற முடியாது. தேர்தல் களம் சூடாக இருப்பது போன்று கோவையில் சூடாக உள்ளது.ஜூன் 4ம் தேதி மக்களின் தீர்ப்பை தி.மு.க.,வினர் பார்ப்பார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்