கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ்-தி.மு.க.வின் கபநட நாடகம் அம்பலம் - எல்.முருகன் விமர்சனம்

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் குறைத்துள்ளது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-01 15:04 GMT

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தில் தங்களின் நயவஞ்சக நாடகம் அம்பலமாகியுள்ளதால் காங்கிரஸ்- தி.மு.க.வினர் அரண்டுபோயுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எழுப்பிவரும் அடுக்கடுக்கான கேள்விகளால் செய்வதறியாமல் திகைத்துபோயுள்ள தி.மு.க. தலைவரும். தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பதிலிலேயே அவரது பயம் தெரிகிறது. கச்சத்தீவு என்ற வார்த்தையை கூறவே அச்சப்படும் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க.வை பார்த்து கேள்வி எழுப்ப என்ன தகுதி இருக்கிறது.

கச்சத்தீவு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நடத்திய நாடகத்திற்குபதில் கூற வழி தெரியாமல் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு செய்துள்ள திட்டங்கள் எண்ணிலிடங்காதவை. மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு ஆட்சியில் தமிழகத்துக்கு முக்கிய திட்டங்களுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டை விடவும் 10 மடங்கு நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் நானும் மற்ற பாஜக தலைவர்களும் பலமுறை பட்டியலிட்டு விட்டோம். ஆனால் நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மு.க. ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா?. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது கச்சத்தீவு பகுதி. 1605 ஆம் ஆண்டு ஆவணம் முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பதிவேடுகளிலும் அப்பகுதி நமது பாரத தேசத்தின் ஓர் அங்கம் என்பது உறுதியாகியுள்ளது. நாடு விடுதலை அடைந்து 1948-ல் ராயத்வாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு பதிப்பிக்கப்பட்ட நில ஆவணங்களின் படி மெட்ராஸ் மாகாணம் சர்வே எண். 1250 இல் கச்சத்தீவு இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஓர் மாநில எல்லையை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் இதை எதையும் மதிக்காமல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் தமிழகத்தில் பதவியில் இருந்த மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் தங்கள் சொந்த நலனுக்காக கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டன.

1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதுபெரும் பா.ஜ.க. தலைவரும். பின்னாளில் பாரத பிரதமராக பதவி வகித்தவருமான வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவிற்கு துரோகம் இழைத்துள்ளதை தகுந்த ஆதாரத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார். மீனவர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நாடகம் நடத்துகிறார். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள்.

கடந்த 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் தாரை வார்த்து விட்டு காங்கிரஸ்-தி.மு.க. கபட கூட்டணி. 1976-ம் ஆண்டு செய்த மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் உரிமைகள் பலி கொடுத்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் குறைத்துள்ளதுடன் இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை காலனின் பிடியில் இருந்து மீட்டு வந்த பெருமை பிரதமர்மோடியை சாரும்.

இந்த சாதனைகளை செய்தது பா.ஜ.க. அரசுதான் என்பதை மறைத்து விட்டு மீனவர்களுக்கு பா.ஜ.க. என்ன செய்தது என்று கேள்வி கேட்டால் தி.மு.க.வின் தவறு மறைந்து போய் விடுமா? மேகக்கூட்டங்களால் முழு நிலவை மறைத்து விட முடியுமா? கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி செய்துள்ள துரோகத்திற்கு முதலில் பதிலை சொல்ல தயாரா?. தமிழக மீனவர் சமூகத்திற்கு யாரும் செய்ய துணியாத துரோகத்தை செய்து விட்டு பதில் சொல்ல துணிவில்லாத தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீனவ மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்