இட ஒதுக்கீடு விவகாரம்: ஜே.பி.நட்டாவுக்கு கர்நாடக போலீசார் சம்மன்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜே.பி.நட்டா விசாரணைக்கு ஆஜராக கோரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Update: 2024-05-09 06:20 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டை, பறித்து முஸ்லிம் சமூகத்தினருக்கு வழங்கி விடுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த கருத்துகள் தொடர்பான சித்திரங்களையும் பா.ஜனதாவினர் வெளியிட்டு இருந்தார்கள். அந்த சமூக வலைத்தள பதிவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் புகைப்படங்கள், வீடியோ  இடம் பெற்றிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா தலைவர்கள் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் இடஒதுக்கீடு பறிக்கப்படும் என பொய்யான தகவல்களை பா.ஜனதாவினர் பரப்பி வருவதால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதன்பேரில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா, சமூக வலைதளப்பிரிவு நிர்வாகி அமித் மால்வியா ஆகிய 3 பேர் மீதும் கடந்த 5-ந் தேதி ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் அமித் மால்வியா ஆகியோருக்கு ஐகிரவுண்டு போலீசார் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்மன் கிடைத்த 7 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஜே.பி.நட்டா, அமித் மால்வியாவுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்