இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்

இந்தூரில் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளார் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளார்.;

Update:2024-04-29 14:39 IST

போபால்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, வரும் 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுவை திரும்பி பெற இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் சிலர் தங்களது வேட்புமனுவை திரும்பி பெற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷங்கர் லால்வானியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அக்சய் காண்டி பாம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அக்சய் காண்டி பாம் இன்று தனது வேட்புமனுவை திரும்ப பெற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளருடன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காண்டி வேட்பு மனுவை திரும்ப பெற்றார்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்புமனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்ப பெற்றுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.

அக்சய் காண்டி பாம் பா.ஜ.க.வில் இணைந்தது வரவேற்கத்தக்கது என்று அம்மாநில மந்திரி கைலாஷ் விஜயவர்கியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்