தர்மபுரி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி
குண்டலப்பட்டி கிராமத்துக்கு சென்ற சவுமியா அன்புமணிக்கு பெண்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய தர்மபுரி, குண்டலப்பட்டி, கிருஷ்ணாபுரம், வெள்ளாளப்பட்டி, என்.எஸ். ரெட்டியூர், முக்கல்நாயக்கன்பட்டி, மூக்கனூர், மணியம்பாடி, கடத்தூர் பேரூராட்சி, புது ரெட்டியூர் உள்ளிட்ட 32 கிராமங்களில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி கொளுத்தும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குண்டலப்பட்டி கிராமத்துக்கு சென்ற சவுமியா அன்புமணிக்கு பெண்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம்-சங்கீதா தம்பதியரின் பெண் குழந்தைக்கு அவர் தென்றல் என்று பெயர் சூட்டினார். கொல்லப்பட்டி கிராமத்தில் முள்ளங்கி அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாய பெண் தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்த அவர், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று பிரசாரம் செய்தார்.
வாக்கு சேகரிப்பின் போது பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி பேசுகையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் அளிக்கும் ஆதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மக்களின் ஆரவாரமும், அவர்களின் வரவேற்பும் தர்மபுரி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று காட்டுகிறது. இந்த மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைவுப்படுத்துவேன் என்று கூறினார்.