எங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி

முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது;

Update:2024-04-14 22:32 IST

Image Courtacy: ANI

முசாபர்நகர்,

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களிலும் இம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் உத்தரப் பிரதேசத்தில் பிரதான அரசியல் கட்சியாக திகழும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது

இந்நிலையில் தனது அரசாங்கம் மத்தியில் அமைந்தால், மேற்கு உத்தரபிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்போம் என்று மாயாவதி அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் ஜாட் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே வெறுப்பு அதிகரித்திருக்கிறது.

இப்பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக, மத்தியில் எங்கள் அரசு அமையும் போது மேற்கு உத்தரப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்போம். இத்துடன் விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லாதோர் மற்றும் சிறு, குறு மக்களின் நலன்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். சிலர் கட்சியை உருவாக்கியபோது, பகுஜன் சமாஜ் கட்சி ஜாட் சமூகத்தினருக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்தார்கள், ஆனால் எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, மேற்கு உத்தரபிரதேசத்தில், குறிப்பாக முசாபர்நகரில் எந்தக் கலவரமும் இல்லை.

எந்தவொரு சாதி மோதல் அல்லது வகுப்புவாத மோதலையும் நாங்கள் இங்கு அனுமதிக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் போது ஜாட் மற்றும் முஸ்லிம்களின் சகோதரத்துவம் உடைந்தது. இங்கு முஸ்லிம்களும், ஜாட்களும் தங்களுக்குள் சண்டையிடுகின்றனர்.

மேலும், முசாபர்நகர் தொகுதியில் முஸ்லீம்கள் மற்றும் ஜாட் இனத்தவர்களிடையே சகோதரத்துவத்தை பேண, இங்கிருந்து ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறேன்" என்று மாயாவதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்