'இந்தியா' கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும் - ராகுல் காந்தி

‘இந்தியா’ கூட்டணி வென்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.;

Update:2024-05-07 19:17 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட 'அக்னிவீர்' திட்டம் ஒழிக்கப்படும். அந்த திட்டத்தை இந்திய ராணுவம் கொண்டு வரவில்லை. தியாகிகளை நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை. தேசத்துக்காக தியாகம் செய்யும் எவருக்கும் தியாகி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும்.

பா.ஜ.க. அரசு ஐந்து வரி அடுக்குகளுடன் தவறான ஜி.எஸ்.டி. திட்டங்களை செயல்படுத்தியது. நாங்கள் அதைத் திருத்தி குறைந்தபட்சமாக ஒரு வரி அடுக்கை உருவாக்குவோம். ஏழைகள் மீதான வரிச்சுமையைக் குறைப்போம்.

பழங்குடியின மக்களுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காமல் அவரை பா.ஜ.க. அவமதித்தது.

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், ரெயில்வே போன்றவற்றை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் உறுதியாக உள்ளது."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்