'எப்போதும் மக்களுடன் இருப்பேன்' - திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான்

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும், எப்போதும் மக்களுடன் இருப்பேன் என யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-21 08:48 GMT

கொல்கத்தா,

கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும், எப்போதும் மக்களுடன் இருப்பேன் என யூசுப் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"மக்கள் ஏற்கனவே என்னை அவர்களது மகனாகவும், சகோதரனாகவும், நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு விட்டனர். என்னிடம், 'உங்களை நாங்கள் கைவிடமாட்டோம்' என்று கூறுகின்றனர். இத்தகைய ஒரு இடத்திற்கு வந்ததை நான் ஆசிர்வாதமாக கருதுகிறேன். தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் அவர்களுடன் நான் எப்போதும் இருப்பேன்.

கடவுளின் அருளால் நான் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். என்னிடம் தற்போது இருக்கும் நேர்மறை சிந்தனை காரணமாக தோல்வி குறித்து என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் கொரோனா உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் அவர் மக்களை சந்திக்கவே இல்லை என பொதுமக்கள் என்னிடம் கூறுகின்றனர்.

மேலும் அவரது தொகுதியில் வேலைவாய்ப்புகளை அவர் உருவாக்கவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களின் கேள்விகளுக்கு அவர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும். பராம்பூர் தொகுதியில் மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பிரசாரத்தின்போதே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

பராம்பூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், இங்கு ஒரு சர்வதேச விளையாட்டு வளாகம், பட்டு உற்பத்திக்கான கட்டமைப்புகள், தெர்மாகோல் மற்றும் சணல் தொழிற்சாலைகள், விவசாய ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்குவேன்."

இவ்வாறு யூசுப் பதான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்