நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறேன் - அண்ணாமலை பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என அண்ணாமலை கூறினார்.

Update: 2024-03-30 13:04 GMT

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து நேற்று கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திறந்து வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கடலூர் தொகுதி வேட்பாளர் தங்கர்பச்சானும் ஒருவர். ஆளுங்கட்சியோடு ஒத்துபோகிற எம்.பி. வேண்டும். அதற்கு இந்த தொகுதியில் தங்பர்பச்சான் வெற்றி பெற வேண்டும்.தி.மு.க. வினர் போலி வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டு வருவார்கள். 511 வாக்குறுதிகளில் எதுவும் செய்யவில்லை. வெறும் 20 வாக்குறுதிகளை தான் நிறைவேற்றி உள்ளார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை. பொய் அறிக்கை. யாரும் காது கொடுத்து கேட்காதீர்கள். என தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதி, அகில இந்திய அளவில் பிரதமர் நரேந்திரமோடி கொடுக்கும் கேரன்டி, 2-வது தமிழ்நாடு அளவில் பா.ஜனதாவின் வாக்குறுதி, 3-வது பா.ஜனதா கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதி என அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்தில், அதாவது 8-ந்தேதிக்குள் வெளியிடப்படும்.தேர்தல் ஆணையத்தின் விதிப்படியே சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சரியான நேரத்தில் சின்னத்திற்காக விண்ணப்பிக்கவில்லை. யாரெல்லாம் முன்கூட்டியே விண்ணப்பித்தார்களோ , அவர்களுக்கு சின்னம் கிடைத்துள்ளது.தமிழகத்தில் ஒரு இடத்தில் போட்டியிடும் சில கட்சிகளுக்கு சின்னம் கிடைக்கவில்லை. அதுவும் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. தேர்தல் சின்னம் விவகாரத்தில் யாருக்கும் எந்தவித அநியாயமும் நடக்கவில்லை.அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய, புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டுமென சீமான் கூறுகிறார். உலகத்தில் உள்ள பல்வேறு ஜனநாயக நாடுகளில் பலரும் பொது சின்னத்தில் தான் போட்டியிடுகின்றனர். இது தான் ஜனநாயகத்தில் இருக்கும் முறை. அவர் விரத்தியில் பேசுவதை மக்கள் பார்க்கின்றனர்.

நான் நிற்பது, நல்ல அரசியலுக்கான மாற்றத்திற்கான அரசியல். ஏற்கனவே வாக்குக்கு ஒரு ரூபாய் வழங்க மாட்டேன். என்னை கண்காணிக்க சவால் விட்டுள்ளேன். இதை தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகளும், வேட்பாளர்களும் சொல்ல தயாரா? என்பது என் கேள்வி. நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன். கோயம்புத்தூரில் நிச்சயம் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள். என கூறினார் .

மேலும் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிதம்பரம் போல்நாராயணபிள்ளை தெருவில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

வி.சி.க.என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது. அது விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்று.தேர்தல் நேரத்தில் சிலர் கட்சியில் இருந்து வெளியேறுவது வழக்கம். நமக்கு தெரியும். திருமாவளவனோடு அட்ஜெஸ்டுமென்ட் அரசியல் தெரியாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். யாரை இங்கு வேட்பாளராக நிறுத்தினால், என்ன நடக்கும் என்பதை அறிந்து, தான் , இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அவுரி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்