'பிரதமர் மோடியை மரியாதையுடன் தலைவணங்குகிறேன்' - பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத்

இமாச்சல பிரதேச மக்கள் சார்பாக பிரதமர் மோடியின் முன்பு மரியாதையுடன் தலைவணங்குவதாக பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-24 16:54 IST

Image Courtesy : ANI

சிம்லா,

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். மண்டி தொகுதிக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு கங்கனா ரனாவத் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மண்டி தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கங்கனா ரனாவத் பேசியதாவது;-

"பாலிவுட் திரையுலகம் என்னை ஒரு அந்நியரைப் போல் நடத்தியதோடு, என் ஆங்கிலத்தையும் கேலி செய்தது. ஆனால், உலகின் மிகப்பெரிய கட்சியான பா.ஜனதாவும், உலகின் மிகப்பெரிய தலைவரான பிரதமர் மோடியும், மண்டி மக்களுக்கு சேவை செய்வதற்காக என்னை தேர்ந்தெடுத்தனர். இமாச்சல பிரதேசத்தின் அனைத்து பெண்கள் மற்றும் குடிமக்கள் சார்பாக நமது பிரதமர் நரேந்திர மோடியின் முன்பு நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் நாள் வந்துவிட்டது.

பிரதமர் மோடி செய்த தொழில்நுட்ப மற்றும் நவீன வளர்ச்சி பணிகள் அளப்பரியவை. இப்போது நான் அவரது குழுவில் ஒரு அங்கமாக இருக்கிறேன். ஒரு கட்சி ஊழியராக மண்டியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இமாச்சல பிரதேச மக்களுக்காக பிரதமர் மோடி மூன்று முக்கிய திட்டங்களை வைத்துள்ளார். அதில் சாலைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், நிதின் கட்கரி மற்றும் பல்வேறு தலைவர்கள் ஏற்கனவே பணியாற்றி பல மைல்கற்களை எட்டியுள்ளனர். நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த மூன்று திட்டங்கள் மற்றும் தொகுதிக்கான நவீன வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவேன். மக்களுக்காக எனது திறமையை விட அதிகமாக உழைப்பேன்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எனது திறமையின் அடிப்படையில் நான்கு தேசிய விருதுகளை வென்றுள்ளேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால், முதல் ஆண்டிலேயே மண்டி மக்களுக்கு ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைக் கொண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன்."

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்