'தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர்' கருத்துக்கு மன்னிப்புகோரினார் மத்திய மந்திரி
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று மத்திய மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்பேட்டையை சேர்ந்த முகேஷ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் தனது கடையில் இந்து மதக்கடவுள் அனுமன் பாடல்களை சத்தமாக வைத்து கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் வழிபாட்டிற்கு வந்த இளைஞர்கள் அனுமன் பாடல் சத்தத்தை குறைக்கும்படி கூறி வாக்குவாதம் செய்தனர்.
பின்னர், கடைக்குள் இருந்து வெளியே வந்த முகேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. தாக்குதலில் காயமடைந்த முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பின்னர் அந்த இளைஞர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார். முகேஷ் மீது கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனிடையே, செல்போன் கடை நடத்தி வந்த இந்து மதத்தை சேர்ந்த வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க., இந்து அமைப்புகள் நகரத்பேட்டையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, பா.ஜ.க. எம்.பி.க்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர்' என்றார். மத்திய மந்திரியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளம் மூலம் மத்திய மந்திரி ஷோபாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே மன்னிப்புகோரியுள்ளார். மேலும், தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு நான் கூறுவது என்னவென்றால் எனது வார்த்தைகள் வெளிச்சத்தை கொண்டுவரவே தவிர இருளை கொண்டுவர அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனாலும், எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை கொடுத்திருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது வார்த்தைகள் அனைத்தும் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சிபெற்ற ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்களை நோக்கியே உள்ளது. எனது கருத்தால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் என்னை மன்னிக்கும்படி உங்களிடம் எனது மனதில் இருந்து கேட்கிறேன். மேலும், தமிழ்நாடு குறித்த எனது கருத்தை நான் திரும்பப்பெறுகிறேன்'
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே கூறுகையில்,
இஸ்லாமிய மத வழிபாடு நிறைவடைந்தபின்னர் தான் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் கூறுகின்றனர். யாருடைய அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது என சித்தராமையாவை நான் கேட்கிறேன்?. இந்து மதத்தினர் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? இந்து மதத்தினர் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வருகின்றனர். தமிழ்நாட்டில் பயிற்சிபெற்று கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர். உணவகத்தில் வெடிகுண்டு வைக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒருநபர் உணவகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளார்.
டெல்லியில் இருந்து வந்த நபர் கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்புகிறார். கேரளாவில் இருந்து வந்த நபர் கல்லூரி மாணவர்கள் மீது ஆசிட் வீசுகிறார். கடையில் அனுமன் பாடலை கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கும்பலாக வந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆர்.டி.நகரில் இளைஞர்கள் வாளுடன் சுற்றித்திரியும் வீடியோவை நான் தற்போது பார்த்தேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அரசு (கர்நாடக காங்கிரஸ் அரசு) சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்த அரசு இந்து மதத்தினருக்கு எதிரானது.
கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா பதவி விலக வேண்டும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்'
இவ்வாறு அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.