நாட்டிலேயே அதிக, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்
ரவீந்திர வைகர்தான் இந்திய அளவில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், தற்போது அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி மத்தியபிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.பி. சங்கர்லால் வானி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் என்பவரை விட 11 லட்சத்து 75 ஆயிரத்து 92 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவே நாட்டின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம் என்று கூறப்படுகிறது. சஞ்சய் பெற்ற ஓட்டுகள் 51,659.
அதே சமயம் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், காங்கிரஸ் போட்டியிடவில்லை. எனவே நோட்டாவில் வாக்களிக்குமாறு காங்கிரஸ் கேட்டுக்கொண்டதால், நோட்டாவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 ஓட்டுகள் கிடைத்தன.
இவருக்கு அடுத்தப்படியாக அசாமின் துப்ரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரகில்புல் உசேன் 11 லட்சத்து 72 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் விதிஷா தொகுதியில் 8.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், குஜராத்தின் நவசரி பா.ஜனதா வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல் 7 லட்சத்து 73 ஆயிரம் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர்.
இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு 7.44 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
குறைந்த ஓட்டில் வெற்றி
மராட்டியத்தின் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா கட்சியின் ரவீந்திர வைகர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தார். அவரிடம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிர்த்திகர் போராடி தோற்றார். ரவீந்திர வைகர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 644 வாக்குகளும், அமோல் கிரித்திகர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 596 வாக்குகளும் பெற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திர வைகர்தான் இந்திய அளவில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்.