ஜார்கண்டில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.;

Update: 2024-04-21 23:55 GMT

ராஞ்சி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்பட சுமார் 28 கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் சார்பில் கூட்டு பிரசாரமும் நடந்து வருகிறது.

அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. 'புரட்சி நீதி' என்ற பெயரில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன், தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ராகுல் காந்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சிறையில் இருக்கும் இந்த கூட்டணி தலைவர்களான ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்காக மேடையில் 2 காலி இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதேநேரம் அவர்களின் மனைவியர் இருவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ஹேமந்த் சோரன் கைது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலைவணங்குவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு அழைக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், பழங்குடியினரையும் பிரதமர் மோடி அவமதித்து விட்டார். பழங்குடியினர் தீண்டத்தகாதவர்கள் என பா.ஜனதா நினைக்கிறது.

பழங்குடியினரை தொடர்ந்து அச்சுறுத்தினால் பா.ஜனதா அழிந்து விடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 150 முதல் 180 இடங்கள் வரையே பெறும்" என்று கார்கே கூறினார்.

இந்த கூட்டத்தில், சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் அனுப்பிய செய்தியை, அவரது மனைவி கல்பனா சோரன் வாசித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜனநாயகம் வீழ்ச்சியடைய அனுமதிக்கக்கூடாது. பா.ஜனதாவும், அந்த சக்திகளும் ஜார்கண்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

எனவே வெளியேறும் வாசலை பா.ஜனதாவுக்கு மக்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் அது பழங்குடியினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்" என்று ஹேமந்த் சோரன் கூறியிருந்தார்.

இந்த கூட்டத்தில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உரையாற்றினார். அப்போது திகார் சிறையில் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், "எனது கணவர் கெஜ்ரிவாலை கொலை செய்ய அவர்கள் (பா.ஜனதா) விரும்புகிறார்கள். கேமரா கண்கணிப்பிலேயே அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. நீரிழிவு நோயாளியான அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது.

மக்களுக்காக உழைத்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டும நிரூபிக்க முடியாது. அரசியல் சதியால் எந்தவித குற்றமும் இன்றி சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்.

விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். எனது கணவர் ஒரு தேசபக்தர். அவர் அதிகாரத்தை விட நாட்டையே அதிகம் நேசிக்கிறார்.

இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். சிறைக்கதவுகள் உடைபடும். கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் வெளியே வருவார்கள்" என்று சுனிதா உறுதிபட கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்