பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.;
பாட்னா,
பீகாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் தொடர்ந்து சிறுபான்மையினரின் அடிமைகளாக இருப்பதாகவும், அவர்கள் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த 'முஜ்ரா' நடனம் ஆடி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார். 'முஜ்ரா' நடனத்தை குறிப்பிட்டு பிரதமர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது அந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக்களை அவமதித்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பீகாரின் சசரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "பீகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் முஜ்ரா வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மோடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தி பீகாரை அவமதித்தார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இது பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
பிரதமர் மோடி தன்னை எஜமானாக கருதுகிறார். அவர் தவறான எண்ணத்தில் இருக்கிறார். மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் 3-வது முறையாக பிரதமரானால், மக்கள் எதுவும் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல. நரேந்திர மோடியை பிரதமராக மதிக்கிறேன். ஆனால் காங்கிரஸ் தலைவர்களை மோடி மதிப்பதில்லை. பிரதமர் மோடி பணக்காரர்களை கட்டிப்பிடிக்கிறார், ஏழைகளை அல்ல" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.