அமேதியில் ராகுல் காந்தி போட்டியா? சஸ்பென்சுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வில், காங்கிரஸ் பெயரில் பகிரப்பட்ட செய்திகள் போலியானவை என்று கண்டறிந்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் கோட்டையான அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இந்த முறை அமேதியில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ராகுல் காந்தி வயநாட்டில் மீண்டும் போட்டியிட்டதால் அமேதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று பேசப்பட்டது. அதேபோல் காங்கிரசின் மற்றொரு முக்கியமான தொகுதியான ரேபரேலியிலும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அமேதியில் ராகுல் காந்தியும் ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் வேட்பாளர்ளாக அறிவிக்கப்பட்டதாக கூறி, காங்கிரஸ் பெயரிலான செய்திக் குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஸ்கிரீன்ஷாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கையொப்பம் இருந்தது. இதேபோல் மற்றொரு ஸ்கீரீன்ஷாட்டில், ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவார் என்றும், அமேதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரீன்ஷாட்களை பார்த்த பயனர்கள் குழப்பமடைந்தனர்.
எனவே, இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்த்தபோது அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் காணப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக செய்திக்குறிப்புகளை சரிபார்த்தபோதும், காங்கிரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தேடியபோதும் அப்படி எந்த செய்திக்குறிப்பும் காணவில்லை. கூகுள் லென்ஸ் மூலம் இந்த ஸ்கிரீன்ஷாட்களை தேடியபோது, பயனர்கள் பகிர்ந்தது மட்டுமே காணப்பட்டன.
இதற்கிடையே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வில், காங்கிரஸ் பெயரில் பகிரப்பட்ட செய்திகள் போலியானவை என்று கண்டறிந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரசின் வேட்பாளர்கள் குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.