வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்

வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Update: 2024-05-26 14:21 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் 1-ந்தேதி 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், அவ்வாறு எதுவும் நடைபெறாமல் இருப்பதை வாக்குச்சாவடி முகவர்கள் உறுதி செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வழிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜூன் 4-ந்தேதி வாக்குப்பதிவு இயந்திரம் எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும் எனவும், கட்டுப்பாட்டு கருவி எண், வாக்குப்பதிவு இயந்திர எண், வி.வி.பேட் கருவியின் அடையாள எண் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரத்தோடு, அன்றைய நேரத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதில் வேறுபாடு இருந்தால் முன்பே இயந்திரம் திறக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்கு விவரத்தை குறித்துக் கொள்ள வேண்டும் என்றும், இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே 'ரிசல்ட்' என்ற பட்டன் அழுத்தப்பட வேண்டும் என்றும் 'இந்தியா' கூட்டணியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்