அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.
கோடை வெயிலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்
அந்த வகையில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து சென்னை வில்லிவாக்கத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் வந்துவிட்டதால் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை.
டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. படித்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை. சென்னையில் மின்கட்டண உயர்வு கடுமையாக உள்ளது. எந்த சாலையும் சரியாக இல்லை. ஆயிரம் ரூபாய் எத்தனை பெண்களுக்கு சமமாக கொடுத்தார்கள்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
முன்னதாக இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.