'கடவுளே... எத்தகைய மனிதரை அனுப்பியிருக்கிறீர்கள்; 22 பேருக்காகவே உழைக்கிறார்!' - ராகுல் காந்தி கிண்டல்

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் மோடி 22 பேருக்காகவே உழைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-23 15:04 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்கு உள்ள ஆற்றல் சாதாரண மனிதரின் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் மோடி 22 பேருக்காகவே உழைக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"பிரதமர் மோடி தன்னை கடவுள் ஏதோ ஒரு விஷயத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைத்துள்ளார் என்று கூறுகிறார். நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது யாராவது இப்படி கூறினால், அவர்களிடம் இருந்து விலகி நமது வேலையை பார்க்கச் சென்றுவிடுவோம்.

கடவுளே... எத்தகைய ஒரு மனிதரை நீங்கள் அனுப்பியிருக்கிறீர்கள்! அவர் 22 பேருக்காகவே உழைக்கிறார். கொரோனா காலகட்டத்தில் கங்கையில் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. டெல்லியில் மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட நபர் நம்மிடம் நமது மொபைல் போன்களில் உள்ள டார்ச் லைட்டை அடிக்க சொன்னார்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்