மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வேட்புமனு தாக்கல்
ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 26ம் தேதி மற்றும் மே மாதம் 7ம் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து கர்நாடகவில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எச்.டி.குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா தலைமையிலான ஜனதாதளம் (எஸ்) கட்சி கடந்த ஆண்டு செப்டம்பரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) மீதமுள்ள 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.