மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு; பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிப்பு
இம்பால் கிழக்கு பகுதியில் 18 கம்பெனி சி.ஏ.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் டயானா தேவி தெரிவித்துள்ளார்.;
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் மணிப்பூரில் மொத்தம் உள்ள 2 மக்களவை தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு வரும் 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்பு படை (சி.ஏ.பி.எப்.) வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இம்பால் கிழக்கு துணை ஆணையர் குமாந்தம் டயானா தேவி, "பாதுகாப்பு அடிப்படையில் வாக்குச்சாவடிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த காலங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழாத வாக்குச்சாவடிகளில் மாநில காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இம்பால் கிழக்கு பகுதியில் 18 கம்பெனி சி.ஏ.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வாக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.