நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கட்டமாக 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.
இதையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதி, கடந்த 7, 13, 20, 25-ந்ேததிகளில் அடுத்தடுத்து 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டன. இதுவரை 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. இதில் குஜராத் மாநிலம் சூரத்தில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், இமாசலபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் போட்டியிடுகிறார். பிரதமரே போட்டியிடுவதால் வாரணாசி தொகுதியை உலகமே கவனிக்கிறது. மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் என பல்வேறு நிர்வாகிகளும் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் பிரசாரத்தில் அனல் பறந்தது. ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்தபோதும், அதன் வேகம், கோடை வெயிலைபோல் அதிகரித்துக்கொண்டே சென்றது. இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஒடிசா மாநில விவகாரம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பா.ஜனதாவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கட்சியினரும் பேசினர்.
இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது பிரசாரங்கள் அதிக கவனம் பெற்றது.
ஒடிசா மாநிலம் பாலாசோர், மயூர்பஞ்ச் நாடாளுமன்ற தொகுதிகளில் பிரதமர் மோடி நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் உடல் நலம் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இவ்வாறு அனல் பறந்து கொண்டு இருக்கும் தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து 7-வது கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தொடங்குகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் முடிந்ததும் வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றே முடிவுகள் அனைத்தும் வெளியாகும். அடுத்து இந்த நாட்டை யார் ஆட்சி செய்யப்போகிறார் என்பதும் தெரிந்துவிடும்.