'திருவனந்தபுரத்தில் தோல்வி; முடிவு ஏமாற்றமளித்தாலும் எனது அர்ப்பணிப்பு தொடரும்' - ராஜீவ் சந்திரசேகர்
தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திருவனந்தபுரம் தொகுதி மக்களுக்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து ஏற்கனவே 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசி தரூர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இதையடுத்து பா.ஜ.க. வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னால் வெற்றி பெற முடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம். சுமார் 3.4 லட்சம் மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திருவனந்தபுரம் தொகுதி மக்களுக்கான எனது அர்ப்பணிப்பு தொடரும்" என்று தெரிவித்தார்.