எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்

பா.ம.க.வினருக்கு வெற்றி கனியை பரிசாக வழங்க மக்கள் தயாராக உள்ளனர் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-12 06:26 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர்காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த சில மணி நேரங்களில் பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

தேர்தல் அட்டவணை நேற்று தான் அறிவிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. ஆனால், அதற்குள்ளாக கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. காலம் இவ்வளவு வேகமாக ஓடுவது வியப்பளிக்கிறது என்றால், கால ஓட்டத்தின் வேகத்தை விஞ்சும் வகையில் களத்தில் நீங்கள் ஆற்றும் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் களத்தில் ஓட்டத்தைத் தொடங்கி விட்டால், வெற்றிக் கோட்டைத் தொடும் வரை நின்று இளைப்பாறுவதற்கோ, நமது வேகத்தை நினைத்து பெருமிதப்பட்டுக் கொள்வதற்கோ நேரம் இல்லை. எனவே, உங்கள் சிங்கப் பாய்ச்சலின் வேகத்தை சிறிதும் குறைத்து விடாதே என்று அறிவுறுத்தவே இந்தக் கடிதம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மக்களவைத் தேர்தலில் நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறோம். தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் விட அவசியத் தேவை கோடிகள் தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதை முறியடித்து, உழைப்புக்கு முன்னால் கோடிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதை எனதருமை பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.

தேர்தல் களத்தில் எதிரிகள் அனைவரும் உங்களை கண்டு மிரள்கின்றனர். எல்லோரும் விரும்பும் வெற்றி உங்களுக்கு எளிதாய் வசமாகிறது. இதற்கெல்லாம் காரணம் உங்களது உழைப்புதான். உங்களை போன்ற இளஞ்சிங்கங்களை எனது போர்ப்படைகளாய் பெற்றதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானத் தேர்தல். ''கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா'' என்பதைப் போல தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லை. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 37 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத்தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற வேண்டியவை ஏராளமாக உள்ளன. மக்களவை பிரதிநிதித்துவத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது பாட்டாளி மக்கள் கட்சிதான். தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல்படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடுங்கள். வெற்றி நம் வசமாகி விடும். ஏப்ரல் 19-ம் தேதி உங்கள் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4-ம் தேதி சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்