'தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய ஊழல்' - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.
அவர் பேசும்போது, 'மத்திய அரசின் தேர்தல் பத்திரம் திட்டம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஊழல். இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களது வேளாண் கடன்களில் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது' என சாடினார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்தி, தங்கள் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.